தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..! பெரிய பெரிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் காத்துக்கிட்டிருக்கு - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!
கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சி மாநாடு - 2026 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "ஜாதி, மதம் என எந்த வேறுபாடும் இல்லாமல் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு செயல்பட்டு வருகிறது. ஊழல் இல்லாத ஆட்சியை வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு பைசா கூட செலவு இல்லாமல், எங்களுக்கு இந்த வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.
அதிக அளவிலான பெண்களும், இளைஞர்களும் சேர்ந்து இந்த புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார்கள். அது, வளர்ச்சிக்கான மாற்றமாக இருக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் விஜய்யின் விருப்பம்.
வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டுமானால் நமக்கு நோக்கம் தேவை. நோக்கம் இருக்க வேண்டும் என்றால், வெளிப்படை தன்மையான அரசு இருக்க வேண்டும். தவெக அரசு அத்தகைய வெளிப்படைத் தன்மையோடுதான் செயல்பட்டு வருகிறது.
கடந்த கால ஆட்சியில் 'கட்சி நிதி' என்ற பெயரில் ஊழல் நடைபெற்றது. அதனை நாங்கள் ஒழித்துள்ளோம். இந்தியாவில் இப்போது ஊழல் இல்லாத முதல் மாநிலமாக தமிழ்நாடாக உள்ளது. ஊழல் இல்லா தமிழ் நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வர வேண்டும். நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களிலோ, அமைச்சரின் அலுவலகங்களிலோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து கோப்புகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம். உங்களுடைய முதலீட்டால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு புது வேலை கிடைக்கும். தமிழ்நாட்டில் 19 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு புதிய வாழ்க்கையை அமைத்து தர வேண்டியது எங்கள் கடமை.
தவறு செய்தால் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். 80 நாட்களில் என்ன செய்தீர்கள் என எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கிறார்கள். பத்திரப்பதிவுத்துறை, கட்டுமானத் துறை, உணவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் 50 ஆண்டுகள் இல்லாத பல மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன.
பெரிய பெரிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன். இதுவரை இல்லாத ஒரு புதிய பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும். தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள்தான் என முதலமைச்சர் நம்பி உள்ளார்.
அதன் அடிப்படையில், இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும். கல்வியிலும், பணியிடங்களிலும் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது.
தர்மபுரி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பெரும்பாலானோர், இன்றளவும் உயர்கல்வி படிக்காமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையை தவெக அரசு மாற்றும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் . வரும் பட்ஜெட்டில் முதலமைச்சர் விஜய் பல அறிவிப்புகளை வெளியிடப் போகிறார். தமிழ்நாட்டில் ஒலிம்பிக் நடத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்கான பணியை நாங்கள் மேற்கொள்ள உள்ளோம்" என ஆதவ் அர்ஜுனா கூறினார்.

