குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..! இனி பட்டா மாறுதல், பட்டா பெயர் மாற்றுதல் ஒரே நாளில் நடக்கும்..!
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உரையாற்றிய அமைச்சர் ரகுபதி, கிராம மக்களை தேடி வருகிற அரசு, கிராம மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருகிற அரசு என நீங்கள் நினைப்பது எங்களுக்கு மகிழ்ச்சி என கூறினார். இது மக்களாகிய உங்களுக்காகவே தொடங்கப்பட்ட திட்டம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, "உங்களுடன் ஸ்டாலின் உங்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம். இந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும், மின்வாரிய அலுவலகத்திற்கோ அல்லது வேறு துறை சார்ந்த அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய குறைகளை தெரிவித்து அதற்கு பதில் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு காலதாமதம் ஆகும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஒரே இடத்திலேயே அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, உங்களிடத்திலேயே இருந்து அந்த குறைகளை கேட்டு மனுக்களை பெற்று அன்று மாலைக்குள் தீர்வு காண வேண்டும் அல்லது 45 நாட்களுக்குள் முழுமையாக தீர்வு காணப்பட வேண்டும்.பல்வேறு இடங்களில் மனு கொடுத்து தீர்வு காணப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய முகமாக உங்களுடைய ஸ்டாலின் முகாம் அமைந்திருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டா மாறுதல் பெயர் மாற்றுதல் உட்பிரிவு மாற்றக்கூடியவைகளாக இருந்தாலும் சரி, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அரசுக்கான துறைகளை இங்கேயே நாடி இங்கேயே தீர்வு காணப்படக்கூடிய திட்டம் தான் உங்களுடன் ஸ்டாலின் முகாம். பொதுமக்கள் அந்தந்த தாலுகாக்களுக்குச் சென்று குறைகளை கூறி அதற்கான பதில்களை பெற காத்திருப்பதற்கு பதிலாக அவர்களிடம் மனுக்களை பெற்று அதற்கான பதிலை அவர்களது வீட்டிற்க்கே தெரிவிக்கின்ற திட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அமைந்துள்ளது. கிராம மக்களை தேடி வருகிற அரசு கிராம மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருகிற அரசு என்று எண்ணி நீங்கள் வெளியே செல்கின்ற நிலைதான் எங்களுக்கு மகிழ்ச்சி" என்று பேசினார்.

