குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..! தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பத்திரம்..!
Apr 4, 2025, 06:00 IST1743726652000

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
- 38 மாவட்ட நிலஅளவை அலுவலகங்கள் மற்றும் நான்கு மண்டல நிலஅளவை அலுவலகங்களுக்கு, பொதுமக்களுக்கு நில ஆவணங்களை விரைவாக வழங்கும் பொருட்டு 42 ஒளிபிம்ப நகலெடுக்கும் கருவிகள் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- நவீன நிலஅளவை கருவிகளைக் கொண்டு, நிலஅளவைப் பணி மேற்கொள்ளும் பொருட்டு 6 மாவட்டங்களில் பணிபுரியும் 454 நில அளவைப் பணியாளர்களுக்கு ரூ.27.24 கோடி மதிப்பீட்டில் வகையீட்டு பூகோள நிலைக்கலன் கருவிகள் வழங்கப்படும்.
- இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தினை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தும் பொருட்டு, நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறையில் பணிபுரியும் 3,078 நிலஅளவைப் பணியாளர்களுக்கு ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் தரவு அட்டைகளுடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்படும்.
- மாநகராட்சி, நகராட்சிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, அரசின் நலத்திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைவதற்கும் சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பத்தூர், திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும்.
- 8 மாவட்டங்களில் 25 புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படும்.
- 26 துணை வட்டாட்சியர் பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படும்.
- ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பவானி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ரூ.14 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும்.
- மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 3 அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூ.13.90 கோடியில் கட்டப்படும்.
- திருவோணம் வருவாய் வட்டம், வாணாபுரம் வருவாய் வட்டம், முத்துப்பேட்டை வருவாய் வட்டம் ஆகிய 3 வருவாய் வட்டங்களுக்கு புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் ரூ.15 கோடியில் கட்டப்படும்.
- 22 மாவட்டங்களில் 27 புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புக் கட்டடங்கள் ரூ.9.45 கோடியில் கட்டப்படும்.
- நான்கு மாவட்ட நிலஅளவை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடங்கள், ஒரு மண்டல துணை இயக்குநர் அலுவலகக் கட்டடம் மற்றும் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்ககக் கட்டடம் ஆகியவை ரூ.71.90 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்களுக்கு 2 புதிய வாகனங்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்களுக்கு 153 புதிய வாகனங்கள் ஆக மொத்தம் 155 புதிய வாகனங்கள் ரூ.16.71 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- மாநிலத்தில் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளை செம்மைப்படுத்துவதற்காக நிபுணர்கள், ஆராய்ச்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் நிருவாகத் துறைகளைக் கொண்டு ஒரு கருத்தியல் தளம் அமைக்கப்படும்.
- கல்லூரிகளில் இளங்கலைப் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக பேரிடர் மேலாண்மை குறித்த பாடம் அறிமுகப்படுத்தப்படும்.மேலும் பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள பேரிடர் மேலாண்மை பாடத்திட்டம் புதுப்பிக்கப்படும்.
- நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை அலுவலர்களுக்கு ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் 10 புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
- நில ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக வைத்து பராமரிக்க 80 வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆவணக் காப்பறைகளில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் காப்பாக்டர்கள் நிறுவப்படும்.
- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீட்டு மனை இல்லாத தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு பூமிதான நிலங்களில் இலவச வீட்டுமனை விநியோகப் பத்திரம் வழங்கப்படும்.
- மனைவரி விதிக்கப்பட்ட இடங்களில் வருவாய் பின்தொடர் பணிகளை மேற்கொண்டு 10,000 குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படும்.