குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..! தமிழ்நாட்டில் 14 வயது சிறுமிகளுக்கு இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி..!

 
1

சென்னை கிண்டி, கிங் நிலைய வளாகத்தில் 6.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.417.07 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு, வரும் ஜனவரி 27-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான ஆயத்தப் பணிகளைச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.

கடந்த 2024 ஜூலை மாதம் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, உலகிலேயே முதன்முறையாக உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இந்த ஆராய்ச்சி மையம் அமையவுள்ளது. சுமார் 3.37 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் கூடிய பிரதான மருத்துவமனைக் கட்டடம், முதுகலை பட்டதாரிகள், செவிலியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான தனித்தனி குடியிருப்பு வளாகங்கள் என பிரம்மாண்டமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உயர்சிறப்பு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு, இதயம், நரம்பியல், எலும்பியல், சிறுநீரகவியல், ரத்தவியல் மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பிரிவுகள் இடம்பெறவுள்ளன. மேலும், நவீன ஆராய்ச்சி ஆய்வக வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகள் அடுத்த 18 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுடன் சேர்த்து, பெண்களை அச்சுறுத்தும் கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பதற்கான முக்கியத் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் நிலையில், அதை முன்கூட்டியே தடுக்க HPV (Human Papilloma Virus) தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2025 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டபடி, மாநிலம் முழுவதும் உள்ள 14 வயதுடைய 3,38,649 சிறுமிகளுக்கு இந்தத் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக (Pilot Phase), சென்னை நந்தம்பாக்கத்தில் வரும் 27-ம் தேதி முதலமைச்சர் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தருமபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 30,209 சிறுமிகள் உடனடிப் பலன் பெறுவர்.

தனியார் மருத்துவமனைகளில் இந்த HPV தடுப்பூசி போட்டுக்கொள்ள சுமார் ரூ.14,000 வரை செலவாகும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு இதனை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. முதற்கட்ட மாவட்டங்களைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்துச் சிறுமிகளுக்கும் படிப்படியாகத் தடுப்பூசி செலுத்தப்படும்.

தமிழகத்தில் ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அமையவுள்ள இந்த பிரத்யேகக் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம், மாநிலத்தின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.