குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..! ஏஐ மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்..!
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொ வரும் திட்டப்பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளை செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் ஆய்வு செய்தார்.
முன்னதாக, திருமுல்லைவாயல் அராபத் ஏரியில் ரூ. 2கோடி மதிப்பில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் மற்றும் புணரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சோழம்பேடு பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு அருந்திய அவர், ஆவடி மாநகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஆவடி பகுதியில், மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.
அந்த வகையில், 1250 மீட்டர் தூரத்திற்கு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்துக்கு முன்பே இந்த பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் குமார், "அராபத் ஏரியில் மேம்பாட்டுப் பணிகள், பூங்கா மற்றும் இரண்டாம் கட்ட படகு சவாரி போன்ற பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய பிரச்னைகளான மின்சாரத் தடை, சாலைகள் அமைத்தல் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படை வசதிகளை முதன்மையாகச் சரி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.
தொடர்ந்து, ஏஐ குறித்து பேசிய அவர், "தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ், இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சிகளை வழங்க திட்டமிட்டிருக்கிறோம்.
இதன் மூலம் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எங்களின் முதன்மை இலக்காக வைத்துள்ளோம். முதலமைச்சர் கொண்டு வரும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்" என அமைச்சர் குமார் கூறினார்.

