குட் நியூஸ் சொன்ன துணை முதல்வர்..! இந்த ஆண்டு 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இலக்கு..!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் "தமிழ்நாடு விளையாட்டு கருத்தரங்கம் 2.0"ஐ (TAMIL NADU SPORTS CONCLAVE - TASCON 2.0) தமிழக துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த பல்வேறு கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவுள்ளனர்.
நிகழ்ச்சியின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பைக்காண போட்டிகள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதற்காக 35 கோடி ரூபாய் பரிசு தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும் இந்த போட்டிகளில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டிகளின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சர்வதேச போட்டிகளை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடத்துவது போன்று, சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்களும் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றனர். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விளையாட்டு துறையில் 3% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உடனடியாக அரசு வேலைகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 25 பாரா ஒலிம்பிக் வீரர்கள் உள்பட 100 வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, விளையாட்டுத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை மேம்படுத்தவும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது" என்று கூறினார்.


