குட் நியூஸ் சொன்ன தமிழக முதல்வர்..!இந்த 4 மாவட்டங்களில் தீம்பார்க்குகள் வரப்போகுது ..!

 
1 1

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு - 2026 (TAMIL NADU GLOBAL TOURISM SUMMIT - 2026)-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது. சாகசச் சுற்றுலா பொழுதுபோக்குச் சுற்றுலா கேரவன் சுற்றுலா கிராமிய மற்றும் மலைத்தோட்டப்பயிர் சுற்றுலா – கடலோரச் சுற்றுலா – பண்பாட்டுச் சுற்றுலா மருத்துவம் மற்றும் உடல் நலம் பேணும் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, பாரம்பரியச் சுற்றுலா என 12 பிரிவுகளின் கீழ் 'தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை-2023' வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையில், தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு, சுற்றுலா சார்ந்த 13 தகுதியான திட்டங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களின் அடிப்படையில் மூன்று வகையாக வகைப்படுத்தி, முதலீட்டு மானியம் கூடுதல் முதலீட்டு மானியம் கட்டமைப்பு ஊக்கத்தொகை மற்றும் மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகை போன்ற முக்கிய சலுகைகள் வழங்கப்படும். இதையெல்லாம், உலகளவில் கொண்டு சேர்ப்பதற்கு இந்த "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சிமாநாடு” நிச்சயம் துணை நிற்கும் என கூறி 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

மூன்று முக்கிய அறிவிப்பு :


முதல் அறிவிப்பு- உலக சுற்றுலா வரைபடத்தில் கலை மற்றும் பண்பாட்டு சுற்றுலாத் தலமாக தமிழ்நாடு இடம்பெற, முதன்முறையாக, அடுத்த
ஆண்டு ஜனவரி மாதத்தில் "தமிழ் பினாலே” நடத்தப்படும்.

இரண்டாவது அறிவிப்பு - மாமல்லபுரத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, முதன்முதலாக மாமல்லபுரத்தில் 'சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம்' அமைத்து, அதன்மூலமாக, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக தரத்தில், நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மூன்றாவது அறிவிப்பு - 2023-ஆம் ஆண்டு சுற்றுலா கொள்கை அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, சிப்காட் நிறுவனம் சுற்றுலா தலங்களை கண்டறிந்து, முதலீடுகளை ஈர்த்து, புதிய சுற்றுலா வசதிகளை உருவாக்கவுள்ளது.இதன் முதற்கட்டமாக, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நான்கு சிறப்பு சுற்றுலா இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, முதலீடுகளை ஈர்க்க விருப்பப்பதிவு கோரிக்கைகள் அழைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து, இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 31 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இவை, நகர்ப்புற சுற்றுலா, சிறப்பு அனுபவ சுற்றுலா, பெரிய சுற்றுலா மையங்கள் என்று பிரிக்கப்பட்டு, இதில் தங்குமிடங்கள், தீம் பார்க்குகள், கேம்பிங் சைட்ஸ் (Camping Sites), இயற்கை அனுபவத் தங்குமிடங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் பல இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என முதலமைச்சர்  அறிவித்தார்.