பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! இலவச பஸ் பாஸ் கால அவகாசம் நீட்டிப்பு..!

 
1

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 2026-27-ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்குவதற்கான விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, இதற்கான கால அவகாசம் அக்டோபர் 10 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது நவம்பர் 20ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ”பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் சுயவிவரம், புகைப்படம் மற்றும் புதிதாகச் சேர்க்கை பெற்ற மாணவர்கள் பேருந்து பயண அட்டை பெற விருப்பம் அல்லது விருப்பமின்மை குறித்த விவரங்களை எமிஸ் தளத்தில் 01.10.2026 முதல் 15.10.2026-க்குள் பதிவேற்றம் செய்ய ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விவரங்களைப் பதிவேற்றம் செய்யக் கூடுதல் கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, வரும் 20.11.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விடுபட்ட மாணவர்களின் உரிய விவரங்களைத் துரிதமாக எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்திட அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.