ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ்... தீபாவளிக்கு முன்...

 
1

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அத்தியாவசியப் பொருட்களை மக்கள் எளிதாகவும், தடையில்லாமலும் பெற தமிழக அரசு முக்கிய முடிவெடுத்துள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான அனைத்து ரேஷன் பொருட்களும் வரும் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் ஒரே கட்டமாக விநியோகிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி காலத்தில் பச்சரிசி மற்றும் பாமாயிலுக்கு அதிக தேவை இருப்பதுடன், பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மக்கள் சிரமமின்றி தேவையான பொருட்களை பெறும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.இதன் ஒரு பகுதியாக, நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஏற்கனவே 100% ரேஷன் பொருட்களையும் கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு விநியோகம்: முதலமைச்சரின் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் வீட்டிலேயே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில், அக்டோபர் 5 மற்றும் 6 தேதிகளில் வீடு தேடி விநியோகச் சேவையை அரசு நடைமுறைப்படுத்துகிறது.

இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (சென்னை மண்டலம்) அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த சிறப்பு திட்டம் குறித்த தகவல்கள் அனைத்து நியாயவிலைக் கடைகளில் விளம்பரப் பலகைகளில் எழுதப்பட்டு, பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழக மக்கள் சிரமமின்றி தேவையான அத்தியாவசியப் பொருட்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொண்டு, தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.