திடீரென மூடப்பட்ட ஐடி நிறுவனத்தால் நடுரோட்டில் நின்ற ஊழியர்களுக்கு குட் நியூஸ்

கோவையில் முன்னறிப்பின்றி மூடப்பட்ட அமெரிக்க நிறுவனத்தின் பணியாற்றிய 3 ஆயிரம் ஊழியர்களுக்கு ஜன.31-ல் நிலுவை ஊதியம், மற்றும் பணிக்கொடை வழங்க, தொழிலாளர் நலத்துறை நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த போக்கஸ் எஜுமெட்டிக்ஸ் ( Focus Edumatics ). என்ற தனியார் நிறுவனம். தமிழகத்தில் இருந்து அமெரிக்க பள்ளிக் குழந்தைகளுக்கு கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட ஆன்லைன் வகுப்பு எடுக்கும் பணிகளை செய்து வந்தது. கோவை சுங்கம் மற்றும் ஆர்.எஸ்.புரம் அலுவலகம், வீட்டில் இருந்தவாறு என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் திடிரென அந்நிறுவனம் மூடப்படுவதாக அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நேற்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். மேலும் நிறுவனத்திடம் ஒப்படைந்த சான்றிதழ்கள் மற்றும் தங்களுக்கு வர வேண்டிய பணப்பலன்கள், இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்நிறுவன ஊழியர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் இது குறித்து ஆர்.எஸ்.புரம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசிலும் புகார் அளித்தனர்.
புகார் மனுக்களை போலீஸார் ஏற்றுக்கொண்டு அதற்கான சி.எஸ்.ஆர். நகலையும் வழங்கியுள்ளனர். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஐ.டி.யு அமைப்பினர், தனியார் நிறுவன ஊழியர்களுடன் இணைந்து கோவையில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்திலும் மனு அளித்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் மீண்டும் தொழிலாளர் நல அலுவலகத்தில் குவிந்த ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊழியர்கள் குழுவினர், அதிகாரிகள் அமெரிக்க நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வரும் 31 ஆம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் ஜன மாத ஊதியம் மற்றும் பணிகொடையை வழங்குவதாக தெரிவித்தனர். மேலும் அவர்களது சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்றிதழ்களை வழங்கவும் நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும் திடிரென வேலையை இழந்து நிற்கும் இளைஞர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வரும் 31 ஆம் தேதி ஊதியம் வங்கி கணக்கில் வந்தவுடன் இழப்பீடு தொகை மற்றும் அது குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனிடையே அரசு தனியார் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏதாவது நடத்தி எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.