இனி விரைவுப் பேருந்துகளிலும் இலவசம்: மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு நற்செய்தி!
தமிழ்நாட்டில் 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் செல்லும் துணையாளர் ஒருவருக்கு, அரசு விரைவுப் பேருந்துகள் உள்ளிட்ட கூடுதல் வகை அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை விரிவுப்படுத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும், மாநகர மற்றும் நகர தாழ்தளப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் பேருந்துகள் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும்.
ஆனால், குளிர்சாதனப் பேருந்துகளுக்கு இந்தச் சலுகை பொருந்தாது. இந்தத் திட்டத்தின்கீழ், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, அவர்களுடன் பயணிக்கும் ஒரு துணையாளரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இந்த சலுகையைப் பெறுவதற்கு, 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் இருப்பதை உறுதிப்படுத்தும், 16 இலக்க எண்ணைக் கொண்ட UDID அடையாள அட்டையைப் பயணத்தின்போது, மாற்றுத்திறனாளிகள் வைத்திருக்க வேண்டும்.
பேருந்து நடத்துநரிடம், அந்த அடையாள அட்டையைக் காண்பித்த பிறகே கட்டணமில்லாப் பயணத்தை மேற்கொள்ள முடியும். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் துணையாளர்களின் பயணங்களைக் கணக்கிடும் வகையில், நடத்துநர்கள் இலவச பயணச் சீட்டு வழங்க வேண்டும்.
இதற்கான உரிய கணக்கீட்டு நடைமுறைகளை உருவாக்குமாறு போக்குவரத்துத் துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர, இதர மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 75 சதவீதப் பேருந்து கட்டணச் சலுகை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுப்படுத்துவதற்காக, மொத்தம் 114 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டிருந்தது.
இதில், தற்போது 7.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான புதிய உத்தரவுகள் 2026ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

