பஸ் பாஸ் வாங்குவோருக்கு குட் நியூஸ்: ஆன்லைனில் வாங்கினால் ரூ.100 வரை தள்ளுபடி..!

 
1 1

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வழங்கும் மாதாந்திர பயண அட்டைகளை 'சென்னை ஒன்' (Chennai One) மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் வாங்குவோருக்கு, தற்போது ரூ.100 வரை சேமிக்கும் புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரூ.50 நேரடி கட்டணத் தள்ளுபடியாகவும் (Flat Discount), யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும்போது கூடுதலாக ரூ.50 கேஷ்பேக் (Cashback) தொகையாகவும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையின் மூலம் பயணிகள் தங்களின் பயணச் செலவை எளிதாகக் குறைத்துக் கொள்ள முடியும்.

இந்தத் தள்ளுபடி முறையின் கீழ், எங்கும் எப்போதும் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மதிப்பிலான சாதாரண பயண அட்டையை வெறும் ரூ.900-க்கும், ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்கக்கூடிய ரூ.2,000 மதிப்பிலான அட்டையை ரூ.1,900-க்கும் பெற முடியும். பேருந்து நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் போக்குவரத்து கழகம் இந்த அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

எவ்வளவு சேமிக்கலாம்?

ரூ.1,000 பாஸ்: ரூ.50 தள்ளுபடி + ரூ.50 கேஷ்பேக் = ரூ.900-க்கு பாஸ் பெறலாம்.
ரூ.2,000 பாஸ்: ரூ.50 தள்ளுபடி + ரூ.50 கேஷ்பேக் = ரூ.1,900-க்கு பாஸ் பெறலாம்.

சலுகையை பெறுவது எப்படி?

  1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 'Chennai One' செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.
  2. உங்கள் மொபைல் எண்ணைபதிவு செய்து கணக்கை உருவாக்குங்கள்.
  3. 'Bus Pass' அல்லது 'Travel Card' பிரிவை தேர்வு செய்யுங்கள்.
  4. உங்களுக்குத் தேவையான மாதாந்திர பயண அட்டையை (ரூ.1000 அல்லது ரூ.2000) தேர்வு செய்யுங்கள்.
  5. கட்டணம் செலுத்தும் பகுதியில், சலுகை விவரங்களைப் பார்த்துவிட்டு, யுபிஐ (GPay, PhonePe, Paytm) மூலம் பணத்தைச் செலுத்துங்கள்.
  6. உடனடியாக உங்கள் டிஜிட்டல் பாஸ் ஆக்டிவேட் செய்யப்படும். ரூ.50 தள்ளுபடியுடன், மீதி ரூ.50 கேஷ்பேக் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.