குட் நியூஸ்..! இனி அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்..!

 
1 1

தமிழகத்தில் நிதி வசதி குறைவாக உள்ள காரணத்தால், ஒரு கால பூசை கூட நடத்த இயலாத நிலையில் இருந்த கோயில்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் "ஒருகால பூசைத் திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றபோது இத்திட்டத்தில் இருந்த கோயில்களின் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி, தற்போது மேலும் 1,000 நிதி வசதியற்ற திருக்கோயில்களை இணைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோயில்களின் மொத்த எண்ணிக்கை 19,000 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு நிதி 25 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யும் வகையில் அதன் மேலாண்மை இயக்குநரிடம் முதல்வர் வழங்கினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு கடந்த காலங்களில் ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பின், அர்ச்சகர்களின் நலன் கருதி முதன்முதலில் 2021-ம் ஆண்டு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தது. தற்போது விலைவாசி உயர்வு மற்றும் அர்ச்சகர்களின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த ஊக்கத்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்க 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Advertisement

கோயில் அர்ச்சகர்களின் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு, வெறும் ஊக்கத்தொகையோடு நின்றுவிடாமல், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டுள்ளது. ஒருகால பூசைத் திட்ட அர்ச்சகர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில ஏதுவாக, தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் இதுவரை 1,500 மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது அர்ச்சகர் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் கணிசமாகக் குறைத்துள்ளது. மேலும், இந்தக் கோயில்களுக்கான மின்கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மின்கட்டணச் சுமையிலிருந்தும் கோயில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில்களுக்கு புதிய பூசை உபகரணங்கள் வழங்கல்

ஒரு கால பூசைத் திட்டத்தில் உள்ள கோயில்களில் முறையான பூசைப் பொருட்கள் இல்லாமல் இருந்த குறையைப் போக்க அரசு முன்வந்துள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டின் சட்டமன்ற அறிவிப்பின்படி, 19,000 திருக்கோயில்களுக்கும் சுமார் 8.58 கோடி ரூபாய் செலவில் புதிய பூசை உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 4,515 ரூபாய் மதிப்பிலான பித்தளை தாம்பாளம், தட்டு, சொம்பு, தூபக்கால், மணி, காமாட்சி விளக்கு மற்றும் பஞ்சபாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமப்புற மற்றும் சிறிய கோயில்களில் பூசைகள் எவ்விதத் தடையுமின்றி சிறப்பான முறையில் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.