குட் நியூஸ்..! 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்..!
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023, மார்ச் 27 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், மேலும் பல பெண்கள் தங்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதன்படி, இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பிக்கும் பணிகள் தொடங்கின. மொத்தம் 28 லட்சம் பெண்கள் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்தனர். இதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டதில், சுமார் 15 லட்சம் பெண்கள் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் தொடக்க விழா நாளை (டிசம்பர் 12, 2025) மாலை 3 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். இதில், சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் மாற்றுத்திறனாளர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற துளசிமதி முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள இருக்கின்றனர்.


