குட் நியூஸ்..!! தமிழகம் முழுவதும் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்கள் தொடக்கம்!

 
1

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) அறிவித்திருந்த மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம்கள் ஏப்ரல் 17 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாம்கள் மே 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலதி ஹெலன், வழிகாட்டுதலின்படி, 18 வயதிற்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தடகளம், கபடி, கால்பந்து, குத்துச்சண்டை மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளில் ஆர்வமுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இன்று தங்களைப் பதிவு செய்து பயிற்சியில் இணைந்துள்ளனர்.

இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்குப் பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி, ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் ஆதார் கார்டு நகலுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அ. ஆனந்த் (7401703461) அவர்களை அணுகலாம்.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் பயிற்சிகள்

அதேபோல், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் 15 நாட்கள் நடைபெறும் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம் இன்று முதல் தொடங்கியது. இதில் தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, சிலம்பம், வூசூ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்குச் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த முகாமில் திறமையாகச் செயல்படும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தயார் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்களுக்கு 04362-235633 அல்லது 7401703496 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில்

சேலம் மாவட்ட பிரிவு சார்பில் இந்த ஆண்டிற்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்ரல் 17 முதல் மே 1-ந் தேதி வரை மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தடகளம், தேக்வாண்டோ, கால்பந்து, குத்துச்சண்டை, கைப்பந்து ஆகிய விளையாட்டு பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையும் நடக்கிறது.

கோடைகால பயிற்சி முகாமில் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி கட்டணம் கிடையாது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், காலை 6 மணி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பங்கேற்கும் அனைவரும் ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த முகாம்களில் பங்கேற்க வேண்டும்?

இந்தக் கோடைகால முகாம்கள் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுவதோடு, மாணவர்களின் உடல்நலம் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன. கோடை விடுமுறையை வீணாக்காமல், அரசு வழங்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தித் தமிழகத்தின் அடுத்த தலைமுறை விளையாட்டு நட்சத்திரங்களாக மாணவர்கள் உருவெடுக்க இது ஒரு சிறந்த அடித்தளமாகும். இன்று தொடங்கியுள்ள இந்தப் பயிற்சிகள் மே மாதம் முதல் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறும். மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு இந்த கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளவும்.