குட் நியூஸ்..! இனி மாதாந்திர பயண அட்டை மொபைலிலேயே புதுப்பிக்கலாம்..!

 
1 1

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில், ''சென்னை ஒன்'' செயலி மூலமாக ரூ.1,000 (Golden Ticket) , ரூ.2,000 (Diamond Ticket)” மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அத்துடன், “நாட்டிலேயே சிறந்த பொதுப்போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்”என்ற தேசிய விருது பெற்றதற்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அனைத்துப் பணியாளர்களுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து மேடையில் உரையாற்றிய அமைச்சர் சிவசங்கர், '' சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) "நாட்டின் சிறந்த பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பைக் கொண்ட நகரம்" என்ற தேசிய விருதைப் பெற்றுள்ளது. இந்த விருது கிடைக்க காரணமான அனைத்து போக்குவரத்து கழகப் பணியாளர்களுக்கும் நன்றி.

சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும் 660க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் எம்டிசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் இந்தியாவில் வேறு எந்த பெருநகரத்திலும் இல்லாத அளவிற்குச் சிறப்பான பொதுப்போக்குவரத்து இணைப்பைச் சென்னை கொண்டுள்ளது. இந்தப் பாராட்டுக்குக் காரணம் இரவு, பகல் பாராமல் பணிபுரியும் தொழிலாளர்கள் தான். பண்டிகை நாட்களில் கூடப் பொதுமக்களுக்காக விடுப்பைத் தவிர்த்துப் பணியாற்றுகின்றனர்.

நமது போக்குவரத்துக் கழகம், மற்ற மாநிலங்களை விட அதிக பேருந்துகளையும், அதிக தொழிலாளர்களையும் கொண்டு வெற்றிகரமாகச் செயல்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் விருது பெற்றிருக்கலாம், ஆனால் தமிழகம் அதிக எண்ணிக்கையில் அரசு ஊழியர்களைக் கொண்டு இந்த வெற்றியை அடைந்துள்ளது.

தினசரி 12.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் பயணிகள் இலவசமாகப் பயணிக்கின்றனர். மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தின் கீழ், பேருந்துகளைப் பள்ளி வளாகத்திற்குள் செலுத்தும் திட்டம் தேசிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மின்னணு பயணச்சீட்டு இயந்திரம், UPI, கிரெடிட்/டெபிட் கார்ட் மற்றும் சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர பாஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கூடுதல் சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடைசி மைல் இணைப்பிற்காகக் குறுகிய சாலைகளிலும், சிறு பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய 'பே மேட்ரிக்ஸ்' முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டு, 5 சதவீதம் சம்பள உயர்வும், ஓராண்டுக்குப் பின் 6 சதவீதம் சம்பள உயர்வும் வழங்கப்பட்டது.

இறந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு விரைந்து பணி வழங்க உத்தரவிட்டதன் பேரில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் இதுவரை 148 ஓட்டுநர்கள், 984 நடத்துநர்கள் உட்பட மொத்தம் 1,155 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது.'' என்று கூறினார்.