குட் நியூஸ்..! குரூப் 2 பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு!

 
1 1

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-ல் 625 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (தொகுதி II மற்றும் IIA) பணிகளுக்கான அறிவிப்பு தேர்வாணையத்தால் 15.7.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 625 பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆகும்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) 2022-ம் ஆண்டு அறிவிக்கையில், ஐந்து நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024ம் ஆண்டு அறிவிக்கையில் இரண்டு நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும் ஆக மொத்தம் ஏழு நிதியாண்டுகளுக்கு 8,784 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது. ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 1,254 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 1270 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத்துறை, நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்.'' என கூறியுள்ளார்.