குட் நியூஸ்..! இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமலே பத்திரப்பதிவு செய்யலாம்..!
பத்திரப்பதிவுத்துறையில் கடந்த மார்ச் மாதம் வருகை இல்லா ஆவணப்பதிவு என்ற திட்டம் அறிமுகமானது. இந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை பதிவுத்துறை வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்த அறிக்கை;
ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தங்களோ நேரடியாக இணைய வழியே ஆவணப்பதிவு முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணைய தளத்தின் மூலம் இணையவழி தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
ஆவணப் பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration) என்ற நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.
சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யக்கூடிய ஆவணங்கள்: முதல் விற்பனை மனை (First sale of Plot) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat) தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள்
பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தாளர்கள் மற்றும் வங்கிகள் அறிவுறுத்தல்கள்:
பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள் நுழைவினை தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை (ரசீது) இணைய வழியில் சமர்ப்பிக்கலாம். ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதி பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யவேண்டும். ஆதார் ஆவணத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரி பார்க்கப்பட வேண்டும். சந்தேகங்களுக்கு 7397574067, 9940446694, 6369798973, 8525805957 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

