குட் நியூஸ்..! இனி முன்னறிவிப்பு இன்றி மின்தடை செய்ய முடியாது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உத்தரவு..!
சென்னையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு ஆகியவை முதல் பணியாக இருக்கும்.வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவாக மக்களுக்கு நன்றி சொல்லச் செல்வார்கள். ஆனால், அதற்கு முன்பாக தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தலைவர் விஜய் தெரிவித்தார்.பூஜ்ஜிய ஊழல், பூஜ்ஜிய கமிஷனை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும். தவெகவினர், குறிப்பாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் டெண்டர்களில் ஈடுபடக் கூடாது என முதல்வர் உறுதியாக கூறியுள்ளார். யாரையும் பரிந்துரைக்க கூடாது என சொல்லியிருக்கிறார்.
பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க சொல்லி இருக்கிறோம். டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்பட்டு அரசு சொன்ன நேரத்தில் கடைகளை மூட சொல்லி இருக்கிறோம்..போதைப்பொருட்கள் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளோம். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எந்த பெண்கள் வந்தாலும் காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா ஆனில் இருக்க வேண்டும் என சொல்லிருக்கிறோம். அது மட்டும் இல்லாமல் யார் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் அதை வீடியோ ரெக்கார்ட் செய்ய சொல்லி இருக்கிறோம். அதற்கு சட்டமன்ற உறுப்பினராக ஒரு ஐடி விங்கிலிருந்து சப்போர்ட் செய்வதற்கு ரெடியாக இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறோம்.
புகார் கொடுக்கும் பொழுது கம்ப்ளைன்ட் கொடுக்க கூடிய பொதுமக்களும் வாங்கக் கூடிய அதிகாரியும் ஒரு வெளிப்படை தன்மையுடன் அந்த வீடியோவை பதிவு செய்து விட்டால் நாளைக்கு இரு தரப்புக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது, எனவே காவல்நிலையத்தில் எல்லா சிசிடிவி கேமரா இப்போதிலிருந்து 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். எல்லா தெருக்களிலும் சிசிடிவி கேமரா பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.
இந்த பகுதியில் மின்சார தடை என்பது இருக்கிறது. மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் சொல்லாமலே மின்சாரத்தை ஆப் செய்கிறார்கள். இனி பொதுமக்களுக்கு மின்தடை பற்றி தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை அணைக்கக் கூடாது. காரணங்களை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு பூத்திலும் என்ன பிரச்சனை என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை வைத்து இறுதி ரிப்போர்ட் கொடுத்திருக்கிறோம். மழை பெய்வதற்கு முன்பாக பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதம் தான் வடிகால் பணி நடக்கும். நாம் ஜூன் மாதத்தில் இருந்தே மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை முடிக்க வேண்டும். நவம்பருக்கு பிறகு அதிகமாக மழை வரும் பொழுது அதைச்சரி செய்ய முடியாது. எனவே இப்பொழுதே சரி செய்யச் சொல்லி இருக்கிறோம்''
டாஸ்மாக் மூலம் 8 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எங்களுக்கு வருவாயை விட மக்களின் உயிர்தான் முக்கியம். அரசு ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும்.அரசு ஊழியர்கள் அதிகமாக தவெகவுக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்வார்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

