குட் நியூஸ்..! பட்டா வழங்கும் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு - அரசாணை வெளியீடு..!!
தமிழ்நாட்டில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் தகுதியானவர்களின் ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், ஆட்சேபனையுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்புகளாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தகுதியான பயனாளிகளுக்கு மாற்று இடம் கண்டறிந்து வீட்டுமனைப் பட்டாவும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திட்டம் செயல்படுத்தும் கால அவகாசத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.இந்தத் திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதன்மூலம் தமிழ்நாட்டில் எண்ணற்ற எளிய மக்கள் பயனடைவார்கள்.
இதற்கான அறிவிப்பில், “அதில் ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் ஏழை மக்களின் குடியிருப்புகளை முறைப்படுத்தி, தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள், அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வரன்முறைப்படுத்தப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது.
மேலும், நீர்நிலைகள் உள்ளிட்ட ஆட்சேபனையுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்புகள் அமைந்திருந்தால், அவற்றை அங்கிருந்து அகற்றி, தகுதியான குடும்பங்களுக்கு மாற்று இடம் கண்டறிந்து வீட்டுமனைப் பட்டா வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் ஒருபுறம் அரசு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துவதுடன், மறுபுறம் நீர்நிலைகள் உள்ளிட்ட முக்கியமான அரசு நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு உரிய பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான முன்மொழிவுகள் திருச்சிராப்பள்ளி, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளதாக நில நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், சில முன்மொழிவுகள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு, அரசாணை வெளியிடுவதற்காக நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கனவே நடைமுறையில் இருந்த சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க நில நிர்வாக ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு, 31.08.2026 முதல் மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு, சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசு நிர்ணயித்துள்ள தகுதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படும் பயனாளிகள் தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் வீட்டுமனைப் பட்டா பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

