குட் நியூஸ்..! சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு..!

 
1

கோடை விடுமுறையையொட்டி தமிழகத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகளும் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கும், விடுமுறையை கழிக்க மலைப்பிரதேசங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். 

வெயில் வாட்டி வதைப்பதால் ஏராளமானோர் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குளிர்சாதன வசதியுடன், குறைந்த மணி நேரத்தில் இடத்தை சென்றடைய ஏதுவாக விமான பயணத்தை மக்கள் தேர்வு செய்கின்றனர். 

இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.  

ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 40-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை அதிகரிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சென்னை-தூத்துக்குடி இடையே தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை-கோவை இடையே தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 16 விமானங்களும், சென்னை-மதுரை இடையே 10 விமானங்களுக்கு பதில் 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன. 

சென்னை-பெங்களூரு இடையே 16  விமானங்களுக்கு பதில் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை-ஐதராபாத் இடையே 20 விமானங்களுக்கு பதில் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன.