குட் நியூஸ்..! ஜன.1ல் 'பாரத் டாக்சி' செயலி அறிமுகம்..!
ஆட்டோ, கார், பைக் வாயிலான பொது போக்குவரத்து சேவையை ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதியை, நாட்டின் பல்வேறு நகரங்களில், 'ஓலா, ஊபர், ராபிடோ' ஆகிய தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. லட்சக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இதில் பதிவு செய்துள்ள டிரைவர்களிடம் இந்த நிறுவனங்கள் அதிக கமிஷன் பிடித்தம் செய்வதாக புகார் உள்ளது. டிரைவர்கள் பயணியரிடம் கூடுதல் கட்டணம் கேட்பதும், தகராறு ஏற்படுவதும் நடக்கிறது.
எனவே, 'சஹாகர் டாக்சி' என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனத்தை ஆட்டோ, கார் டிரைவர்கள் துவங்கினர். இதில் ஆயிரக்கணக்கான டிரைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு நிறுவனம் சார்பில், 'பாரத் டாக்சி' என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.
இதை டில்லியில் ஜனவரி 1ல் அறிமுகப்படுத்த உள்ளனர். டிரைவர்களே நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் இருப்பதால் பூஜ்ய கமிஷன் முறையில் செயலியை வடிவமைத்துள்ளனர். தனியார் வாகன முன்பதிவு செயலிகளில் இருப்பதை போலவே மற்ற வசதிகள் அனைத்தும் இதிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
வெளிப்படையான கட்டண அமைப்பு, வாகனத்தை கண்காணிக்கும் வசதி, 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை, டில்லி காவல் துறையுடன் இணைப்பு உள்ளிட்டவை இந்த செயலியில் உள்ளதாக கூட்டுறவு நிறுவனம் தெரிவித்தது.
டில்லியை தொடர்ந்து குஜராத்தின் ராஜ்கோட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ல் அறிமுகமாகிறது. இதை மேலும் 20 நகரங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


