குட் நியூஸ்..! அரசு கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர்கள் பணி..!
உயர்கல்வித்துறை அரசுச் செயலாளர் சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையில், ''அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பு ரத்துச் செய்யப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து நிரப்புவதற்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும் இந்தப் பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
காலையில் நடைபெறும் தாள் ஒன்று தேர்விற்கான கேள்வித்தாளில் பகுதி 1 தேர்வில் தமிழ்மாெழி தகுதித்தேர்விற்கு 30 வினாக்கள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். அதில் 40 சதவீதம் மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும். அதனைத் தாெடர்ந்து பகுதி 2ல் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும். அதன் பின்னர் மாலையில் நடைபெறும் தாள் 2 தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு விவரித்து எழுதுக முறையில் கேள்விகள் இடம்பெறும். இதற்கான நேர்காணலின் போது கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணியாற்றிய அனுபவத்திற்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்களும், நேர்காணலுக்கு 15 மதிப்பெண்களும் அளிக்கப்படும்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் 4 ஆயிரம் பேர் நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் உயர்கல்வி துறை தற்போது 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு இடஒதுக்கீடு பெறப்பட்ட பிறகு, போட்டி எழுத்து தேர்வு நடைபெறுவதற்கான தேதி, விண்ணப்பிக்கும் தேதி போன்றவைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்'' என்றார்.


