குட் நியூஸ்..!! இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை..!!
ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வீதம் வெங்காயம் வழங்கப்பட உள்ளது.
ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பு:
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் விலை உயர்வு கண்காணிக்கப்படுகிறது. ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை ஏற்றத்தால், போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில், காலநிலை மாற்றத்தால் வெங்காய வரத்து குறைந்துள்ளது.
இதனால், வெளிச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயம், 56 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிப்பதை தடுக்கும் வகையில், தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய நுகர்பொருள் கூட்டமைப்புடன் இணைந்து, 1,000 டன் வெங்காயத்தை, உணவுத் துறை கொள்முதல் செய்கிறது.
முதல் கட்டமாக, நகர்ப்புறங்களில் உள்ள, 8,739 ரேஷன் கடைகளில், 80 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தலா ஒரு கிலோ வெங்காயம், 35 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது. தேவைப்பட்டால், கூடுதல் வெங்காயம் கொள் முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

