குட் நியூஸ்..!! புதிய ஆதார் செயலி அறிமுகம்! இனி ஜெராக்ஸ் எடுக்க தேவையில்லை!

 
1

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலி, செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் சேவைகளை உங்கள் விரல் நுனியில் வழங்குகிறது.

இந்த செயலியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று முக அடையாள சரிபார்ப்பு (Face ID authentication) வசதி. இது செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, சரிபார்ப்பு செயல்முறையை மிகவும் பாதுகாப்பானதாகவும், தொந்தரவு இல்லாததாகவும் ஆக்குகிறது.

UPI மூலம் பணம் செலுத்துவது போல, இனி QR code-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் ஆதார் விவரங்களை சரிபார்க்கலாம். அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "ஆதார் சரிபார்ப்பு இப்போது UPI செலுத்துதல் போல எளிதாகிவிட்டது. பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாகவும், அதே நேரத்தில் டிஜிட்டலாகவும் சரிபார்த்துப் பகிர்ந்து கொள்ளலாம்" என்றார்.

தற்போது பீட்டா பதிப்பில் (beta version) இருக்கும் இந்த செயலி, மிக உயர்ந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. ஆதார் விவரங்களை போலியாக உருவாக்கவோ, திருத்தவோ அல்லது தவறாக பயன்படுத்தவோ முடியாது. தகவல்கள் பாதுகாப்பாகவும், பயனரின் அனுமதியுடனும் மட்டுமே பகிரப்படும். ஹோட்டல் வரவேற்பு, கடைகள் அல்லது பயணத்தின்போது என எந்த இடத்திலும் ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் நகலை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஆரம்ப கட்ட அணுகலில் (early access) இருக்கும் இந்த செயலி, விரைவில் அனைவருக்கும் கிடைக்கும். டிஜிட்டல் அடையாள சரிபார்ப்பின் எதிர்காலத்திற்கு தயாராகுங்கள்!