குட் நியூஸ்..!! மீண்டும் சரசரவென சரிந்த தங்கம் விலை..!!
May 27, 2026, 09:56 IST1779856007660
இந்த ஆண்டு தொடங்கிய போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 12,440-ஆக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் விறுவிறுவென உயர்ந்து ஜனவரி 29-ஆம் தேதி புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ.16,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படியே உயரும் பட்சத்தில் பாதில் ஆண்டிற்குள்ளாகவே ஒரு சவரன் விலை ரூ.2 லட்சத்தை தொட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறிவந்தனர்.
ஆனால் இந்த விலை உயர்வுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஆரம்பித்தது அமெரிக்கா - ஈரான் போர். பொதுவாக உலக நாடுகளிடையே போர் நடைபெறும்போது பாதுகாப்பான முதலீட்டை பலர் தேர்ந்தெடுப்பதால் தங்கம் விலை கணிசமாக உயரும். ஆனால் இந்த போரானது தங்கம் விலையை சரிவை நோக்கி கொண்டுசென்றுள்ளது.
ஏனெனில், மேற்காசிய நாட்டில் ஏற்பட்டுள்ள போரால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தகமானது டாலரில் நடைபெறுவதால் டாலர் மதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க, கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கம் விலையானது குறைந்து வருகிறது.
ஆபரண தங்கத்தின் விலை நேற்று (மே 26) ஒரு கிராம் ரூ.14,730க்கும், ஒரு சவரன் ரூ.1,17,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,650க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

