குட் நியூஸ்..!! தேங்காய் எண்ணெய் விலை ரூ.2000 குறைந்தது..!!

 
Q Q
கோவை, திருப்பூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. இதில், பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் உற்பத்தியாகும் தேங்காய், கொப்பரையாக்கப்பட்டு காங்கயம் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. அங்கு, தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து, உள்மாநில தேவைக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
கடந்த இரு ஆண்டுகளாக கேரளாவில் வேர்வாடல், வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்தது. இதனால், தேங்காய் எண்ணெய் விலை விண்ணை முட்டும் உயரத்தில் இருந்தது. இந்நிலையில், வடமாநிலங்களில் உறைபனி அதிகம் உள்ளதால் தேங்காய் எண்ணெயின் தேவை குறைந்ததால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது: நடப்பாண்டு தேங்காய் வரத்து குறைந்ததால், கொப்பரை, தேங்காய் எண்ணெய், தேங்காய் விலை வேகமாக உயர்ந்தது. காங்கயம், ஊத்துக்குளியில் இருந்து தினமும், 500 டன் தேங்காய் எண்ணெய் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.
வடமாநிலங்களில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. உறைபனியால், தேங்காய் எண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக கடுகு எண்ணெய் அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதனால், கடந்த மாதம், 5,500 ரூபாய் வரை விற்கப்பட்ட 15 கிலோ டின் தேங்காய் எண்ணெய், தற்போது, 3,450 ரூபாயாக குறைந்துள்ளது.
15 கிலோ டின்னுக்கு, 2,000 ரூபாய் வரை விலை சரிந்து உள்ளது. வரும் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை பனிக்காலம் என்பதால் விலை சரிவு தொடரக்கூடும். எனினும், இது தற்காலிக விலை சரிவு தான். தேங்காய் உற்பத்தி அதிக அளவில் இல்லாததால், பனிக்காலம் நிறைவடைந்ததும் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.