சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு... சவரன் ரூ.39 ஆயிரத்தை தாண்டி விற்பனை..

 
தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 216 அதிகரித்து ஒரு சவரன் 39,016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே  தங்கம் விலை அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்னர் சர்வதேச பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை சிறந்த புகலிடமாக கருதுகின்றனர்.  தங்கத்தின் மீதான் முதலீட்டை  சிறந்த சேமிப்பாகவும், லாபகரமானதாகவும் கருதுகின்றனர்.  ஆகையால் தங்கத்தின் மவுசு கூடி, அதன் விலையும் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது.  அப்படியே ஏதோ ஒரு நாள் விலை குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் விலை அதிகரித்து விடுகிறது.   

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக 216 ரூபாய் அதிகரித்திருக்கிறது.  நேற்று  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம்   4850  ரூபாய்க்கும்,   ஒரு சவரன்  ரூ. 38, 800  விற்பனையானது . ஆனால் இன்று  ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.27 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,877 விற்கப்படுகிறது.  அதேபோல,  8 கிராம் கொண்ட  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 216 ரூபாய் உயர்ந்து ரூ. 39,016  க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு... சவரன் ரூ.39 ஆயிரத்தை தாண்டி  விற்பனை..

அதேபோல் நேற்று சரிவை சந்தித்திருந்த வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 66 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி விலை, இன்று  66.80 ரூபாயாக  உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.