நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி: 2வது நாளாக உயர்ந்தது ஆபரண தங்கம் விலை!

 
Gold

தங்கம் விலை கடந்த மாதம் பெரும்பாலான நாட்களில் குறைந்து நகைப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதன்படி ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ. 8,360 குறைந்திருக்கிறது. தங்கம் விலை வரும் நாட்களிலும் குறைய அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறும் நிலையில், இந்தியாவில் ஒரு சவரன் விலை ரூ. 75 ஆயிரம் வரை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த முறை அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதிலிருந்தே தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. மீண்டும் வட்டி விகிதம் குறைக்கப்படும் பட்சத்தில் அது தங்கம் விலையின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், வட்டி விகிதம் உயரும்போது டாலரில் முதலீடு செய்பவர்கள் தங்கள் வசமுள்ள தங்கத்தை விற்றுவிட்டு, அதனை டாலரில் நடைபெறுகிற வர்த்தகத்தின் மீது முதலீடு செய்வார்கள். இதனால் குறுகிய காலத்தில் அதிக லாபம் அடைய முடியும்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் கெவின் வாஷ் தலைமையில் நடந்த வட்டி விகிதம் குறித்த கூட்டத்தில் 12 பேர் கொண்ட நிபுணர் குழு பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் 10 பேர் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்றும், 3.75% முதல் 4% வரையிலேயே தொடரலாம் என்றும் வாக்களித்தனர். ஆனால் மூத்த உறுப்பினர்கள் 2 பேர் பணவீக்கத்தை கருத்தில்கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், வட்டி விகிதம் உயர்த்தப்படாததால் தங்கம் விலை இனிமேல் குறைய வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை என்கின்றனர் நிபுணர்கள். டிசம்பரில் நடைபெறுகிற கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை குறையலாம் என்றும் மற்றொரு கருத்தையும் நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

கடந்த வாரம் சரிவை சந்தித்த தங்கம் விலை, இந்த வாரத்தின் 2வது நாளான இன்று (நவ., 3) சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.45 அதிகரித்து ரூ.12,775 ஆகவும், சவரன் ரூ.360 அதிகரித்து ரூ.1,02,200 ஆகவும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று கிராம் ரூ.25 அதிகரித்து ரூ.12,800 ஆகவும், சவரன் ரூ.200 அதிகரித்து ரூ.1,02,400 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.200 ஆகவும், ஒரு கிலோ ரூ.2 லட்சமாகவும் தொடர்கிறது