திடீரென சரிந்த தங்கம் விலை..! தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. ஆனா ஒரு 'பேட் நியூஸ்'!

 
gold

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெறும் போர் பதற்றம் காரணமாக, கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. பொதுவாகவே, போர் என்றால் தங்கம் விலை தாறுமாறாக அதிகரிக்கும். ஆனால், இந்த போரின் தங்கத்தின் மீது எதிரொலித்துள்ளது.

போர் சூழல் காரணமாக பங்குச்சந்தை சரிந்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தை சேமிப்பதற்கு பதிலாக, அதனை விற்க தொடங்கியுள்ளனர். அதுவே தங்கத்தின் விலை தொடர் சரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்டக் கடந்த 10 நாளில் மட்டும் ரூ.9 ஆயிரத்திற்கு மேல் சரிந்துள்ளது.

அதன்படி, இன்று காலையில், ஆபரணத் தங்கம் ரூ.2,160 ரூபாய் குறைந்த நிலையில், மீண்டும் மாலையில் ரூ.3,200 குறைந்தது. ஒரே நாளில் காலை, மாலை என ரூ.5,360 சரிந்து, ஒரு கிராம் ரூ.13,900-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியும் கணிசமாக குறைந்து வருகிறது. இந்த செய்தி நகைப்பிரியர்களை குஷியாக்கியுள்ளது. ஆனால், மக்கள் எதிர்பார்ப்பது போன்று ஒரு லட்சத்திற்கு கீழ் குறையாது என்று கூறுகின்றனர் நகை வியாபாரிகள்.

இந்த நிலையில், தங்கம் விலை நிலவரம் குறித்து நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், “பொதுவாக போர் சூழல் ஏற்பட்டால் தங்கத்தின் விலை அதிகரிக்கும். ஆனால், தற்பொழுது தங்கத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது.

கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றம் காரணமாக, பெரும்பாலான முதலீட்டாளர்கள் தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் மீது முதலீடுகளை செய்து வருகிறார்கள். உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றம் காரணமாக, தற்சமயம் முதலீட்டாளர்கள் யாரும் எதிலும் முதலீடு செய்யாமல் நடுநிலை வகிப்பதும், தங்கம் விலை சரிவதற்கு ஒரு முக்கிய காரணம்.

தற்போது, தங்கத்தின் விலை குறையத் துவங்கியுள்ளது. இதேநிலை நீடித்தால், மேலும் சவரனுக்கு ரூ.2,000 முதல் 4,000 வரை குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் சவரன் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைய வாய்ப்பு இல்லை. அதேபோன்று, இதே நிலை நீடிக்க வாய்ப்புகளும் குறைவு. உலக முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கினால், முன்பு இருந்ததை விட மிகவும் உச்சத்திற்கு செல்ல வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது” என்றார்.