வாரத்தின் முதல் நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்திருக்கிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அந்தவகையில் தங்கம் விலை கடந்த மே மாதம் ரூ.55,200 என்கிற புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து முன்னும் பின்னுமாக இதே நிலவரத்தில் நீடித்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் இறங்கு முகத்தில் இருந்து வருகிறது. கடந்த 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம் வெள்ளி மற்றும் பிளாட்டினத்திற்கான சுங்க வரி குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.
அதாவது பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15%ல் இருந்து 6% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது முதல் தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்து வந்தது. குறிப்பாக ஜூலை 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,160 குறைந்தது நகைப்பிரியர்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட 4 நாட்களுக்குப் பிறகு அதாவது கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. அன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6465-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.51,720-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்கிழமை) சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.6,415-க்கும். பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.51.320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89.50-க்கு விற்பனையாகிறது.


