மாதத்தின் முதல் நாளில் சரிந்த தங்கம் விலை..
மாதத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை சரிவுடன் தொடங்கியிருக்கிறது. அதன்படி சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.
தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுவருவதே நிதர்சனம். மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி பட்ஜெட்டுக்கு பிறகான 5 நாட்கள் தங்கம் மளமளவென சவரனுக்கு ரூ.5ஆயிரம் வரை சரிந்தது. ஆனால் தொடர்ந்து சரியும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய வகையில், அதன்பின்னர் தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டது.
அதிலும் கடந்த 15 நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ரூ. 7 ஆயிரத்தை தாண்டி, ஒரு சவரன் ரூ. 57,000ஐ நெருங்கியது. அதன்படி கடந்த வாரம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 56,800 என்கிற புதிய உச்சத்தை எட்டியது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7,100க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் வெள்ளி விலையும் அதிரடியாக புதிய உச்சத்தை எட்டி ஒரு கிராம் வெள்ளி ரூ.102க்கு விற்பனையானது. அதன்பின்னர் நேற்றைய் தினம் தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு சவரன் ரூ.56,640க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு ரூ.240ம் குறைந்திருக்கிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,050க்கும் ஒரு சவரன் ரூ. 56,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.101க்கு விற்பனையாகிறது.