தங்கம் விலையில் திடீர் சரிவு: சவரனுக்கு ரூ.1,080 குறைந்தது – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய பொருளாதார சூழல், பணவீக்கம், முதலீட்டாளர்களின் கவனம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள்கூட இந்தியாவில் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவும் காலங்களில் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி பலரும் வாங்குவதால் அதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வது மற்றும் ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களும் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலையை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணிகளாக உள்ளன.
நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.260-க்கு விற்பனையானது.
இந்நிலையில் தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 31) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைந்து, ரூ.1,14,960-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.

