நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை.. 4 நாட்களில் 1,640 உயர்வு..
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம் கண்டு வருகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலை குறைவது போல போக்கு காட்டி வந்தாலும், கணிசமாக விலை ஏற்றம் கண்டே வருகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை, கடந்த 16ம் தேதி ஒரே அடியாக சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ரூ. 57,000ஐ தாண்டியது. தொடர்ந்து அக்.17 அன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,280க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 103 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோன்று அக்.18 இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 57,920 ரூபாய் என்கிற புதிய உச்சத்தை எட்டியது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,240க்கு விற்பனையானது. இதேபோல் வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ. 105 என்கிற புதிய உச்சத்தை எட்டியிருந்தது. அதன்பின்னர் கடந்த 19ம் தேதி சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,240க்கும் , ஒரு கிராம் ரூ.7,280க்கும் விற்பனையானது. அதேபோல் அன்றைய தினம் சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.107க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவரும் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்றும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் மேலும் ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.58,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,300க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலையும் மேலும் ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.109க்கு விற்பனையாகிறது.
கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,640 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 6000 ஏற்றம் கண்டிருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த அதிரடி விலையேற்றம் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு தங்கம் சென்றுவிட்டதாக இல்லத்தரசிகள் கலக்கம் தெரிவித்துள்ளனர்.