சபரிமலையில் தங்க தகடுகள் திருட்டு போன வழக்கு- தமிழகத்தில் 21 இடங்களில் ED சோதனை
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க நகை திருட்டு வழக்குத் தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதா எனும் கோணத்தில் சோதனை நடத்திவருகிறது.

சபரிமலை ஐய்யப்பன் கோவில் மேற்கூரை, கருவறை கதவுகள், துவாரபாலகர் சிலைகள் உள்ளிட்டவை 1998ம் ஆண்டில் தங்கத் தகடுகளால் வேயப்பட்டன. நாளடைவில் அதன் நிறம் மங்கலானது; சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டன. இவற்றை பழுது பார்க்க, தகடுகளை பிரித்து 2019ல் சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தனர். உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் அந்தப் பணியை பொறுப்பேற்று செய்தார். அப்போதே தங்கம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அது வெளியே தெரியவில்லை. கடந்த ஆண்டும், இதே போன்ற பழுதுபார்ப்பு பணியை அவர் துவங்கினார். துவாரபாலகர் சிலைகள் மீதுள்ள தங்கத் தகடுகளை செப்பனிட அவர் எடுத்து சென்றதும், அவற்றை உடனடியாக திரும்ப கொண்டு வருமாறு கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. அதை எடை போட்ட போது, 4 கிலோ அளவுக்கு தங்கம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் சபரிமலை தங்கம் கொள்ளை போன விவகாரம் வெளி உலகுக்கு தெரிந்தது. இதை விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. 2025 அக்., 16ல், உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர், சபரிமலையில் பணியாற்றிய நிர்வாக அதிகாரி முராரி பாபு, செயல் அலுவலர் சுதீஷ்குமார், திருவாபரணம் ஆணையர் பைஜூ, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் ஆணையர் மற்றும் தலைவர் வாசு, தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமார், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார் , பெல்லாரி ஜுவல்லரி உரிமையாளர் கோவர்தன், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிரபல நகை தயாரிப்பு நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டரி உள்ளிட்ட 10 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தந்திரி கண்டரரு ராஜீவரரு, 11வது கைது செய்யப் பட்டார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. அதன் பேரில் கேரளா மற்றும் தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 21 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள பங்கஜ் பண்டாரியின் மகன் பதன்ராஜ் பண்டாரி வசிக்கும் வீடு, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனையானது நடைபெற்று வருகிறது.


