"தங்கம்.. தங்கம்.. தங்கம்..!" தாயாரின் பிறந்தநாளை தங்க கேக் வெட்டி கொண்டாடிய ஊர்வசி ரவுத்தேலா..!
தமிழ் சினிமாவில் 'லெஜண்ட்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஊர்வசி ரவுத்தேலா, எப்போதும் ஆடம்பரமான விஷயங்களுக்காகவே சமூக வலைதளங்களில் பேசப்படுபவர். சமீபத்தில் தனது பிறந்தநாளைத் தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டிக் கொண்டாடி வியப்பை ஏற்படுத்திய அவர், தற்போது தனது தாயாரின் பிறந்தநாளையும் அதே பாணியில் கொண்டாடியுள்ளார். உலகின் மிக உயரமான ஹோட்டலில், 24 காரட் தங்க கிரீடம் பதிக்கப்பட்ட கேக் வெட்டித் தனது தாய்க்கு அவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை "தூய அன்பு" என்ற வாசகத்துடன் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஊர்வசி ரவுத்தேலா ஆடம்பரத்திற்கு மட்டுமின்றி, பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்றவர். கிரிக்கெட் மைதானத்தில் தனது தங்க செல்போன் திருடு போனதாகக் கூறியது முதல், ஆன்லைன் சூதாட்ட விளம்பர விவகாரத்தில் அமலாக்கத்துறை (ED) விசாரணையில் சிக்கியது வரை அவரது பெயர் அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. குறிப்பாக, பத்ரிநாத் கோயில் அருகே தனக்குக் கோயில் இருப்பதாக அவர் கூறியது, ஆன்மீகப் பெரியவர்கள் மற்றும் மதக் குருக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களில் நடிப்பதை விட, சமூக வலைதளங்களில் தனது வினோதமான நடவடிக்கைகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதையே அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் எல்லை மீறிய ஆடம்பரத்தைக் காட்டுவதாலேயே அவர் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகிறார். இருப்பினும், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தனது பாணியில் தொடர்ந்து வைரலாகி வருகிறார் ஊர்வசி. தற்போது அவர் பகிர்ந்துள்ள தனது தாயின் பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளன.


