காசு கொடுத்தால் கடவுளை கட்டிபிடிக்க முடியுமா?- ஐகோர்ட்
தமிழக கோவில்களில் விஐபி தரிசனத்துக்காக ஏன் தனி நேரத்தை ஒதுக்கக்கூடாது? என தமிழக அரசுகக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது, விஐபி தரிசனம் ஏன் எனவும், பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்; அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி வி பாலசுப்ரமணியம், சாமி தரிசனத்துக்கு கட்டணம் கட்டாயம் இல்லை எனவும், கூட்ட நெரிசலை சமாளிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும், அந்த தொகை கோவிலுக்கு முக்கிய வருவாயாக உள்ளது எனவும் விளக்கம் அளித்தார். மேலும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.பணம் கொடுத்தால் கடவுளை கட்டியணைக்க முடியுமா? யாருக்கும் சலுகை காட்டாதீர்கள் அல்லது முக்கியஸ்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை தரிசனத்துக்காக ஒதுக்கீடு செய்யலாம் என தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க அரசுகக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

