தோற்ற தொகுதியில் போய் "ஜெயிக்க வச்சதுக்கு நன்றி"! தவெக அமைச்சரின் பேச்சால் நெட்டிசன்கள் கலாய்..!
தமிழக மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்ரீநாத்.முதல்வர் விஜயின் நெருங்கிய நண்பரான இவர் துாத்துக்குடி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று, மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், மே 29ம் தேதி, வைகாசி விசாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய, திருச்செந்துார் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், ஆறுமுகனேரி அருகே, மடத்துவிளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, அங்கிருந்தவர்கள், 'புன்னக்காயல் மீனவ கிராமத்தில் த.வெ.க.,விற்கு அதிக ஓட்டு கிடைத்தது. அங்கு சென்று நன்றி தெரிவித்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர்' என, தெரிவித்தனர். அழைப்பை ஏற்று, புன்னக்காயல் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத்திற்கு, மீனவ மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, திறந்த வேனில் நின்றபடி அவர் பேசுகையில், ''அதிக ஓட்டு வித்தியாசத்தில் என்னை ஜெயிக்க வைத்த இந்த ஊர் மக்களுக்கு, கோடான கோடி நன்றிகள்,'' என்றார். புன்னக்காயல் கிராமம், திருச்செந்துார் சட்டசபை தொகுதிக்குள் உள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க., வேட்பாளர் முருகன் தோல்வி அடைந்தார். இந்நிலையில், ஸ்ரீநாத் பேசும் வீடியோ வை பதிவிட்டு, 'அமைச்சருக்கு, எந்த ஊர், எந்த தொகுதியில் இருக்கிறது என்ற விபரம் கூட தெரியவில் லை' என, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் ஸ்ரீநாத் பக்கத்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் ஓட்டு போட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ.யார் என்று தெரியாது. எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் யாருன்னு தெரியாது, தொகுதி எதுன்னு தெரியாது, இது மாற்றம் இல்லை, ஏமாற்றம்.
தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும், முதல்-அமைச்சருக்கும் அனுபவம் தெரியாது, வரலாறு தெரியாது, போராட்டமும் தெரியாது, தியாகம் தெரியாது, பிரச்சனைகளும் தெரியாது, நிர்வாகம் தெரியாது, தொகுதியும் தெரியாது, தொகுதி மக்களையும் தெரியாது, தொகுதி மக்களுடைய உரிமையும் தெரியாது, மக்களுடைய எதிர்பார்ப்பும் தெரியாது, ஆளுமையும் தெரியாது, அதிகாரமும் தெரியாது, அரவணைப்பும் தெரியாது.
தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கால அவகாசம் எடுத்து கொள்ளலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதிலே ஒரு நாள் கூட தாமதித்தால் என்ன ஆகும் என்பதை இப்போது தமிழகம் பார்த்து கொண்டிருக்கிறது.
ஆகவே எதுவுமே தெரியாது, ஆனால் விஜய்க்கு மக்களை ஏமாற்ற மட்டும் தெரியும். விஜய் ஆட்சியில் தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ? என்பது நமக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது, காலம் தான் இதற்கு தீர்வு சொல்லும். அதுவரை நாம் பொறுமையோடு தான் இதை கடந்து செல்ல வேண்டுமா என்பதை தமிழக மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

