கோயில் நிலத்தில் வீடு கட்டிய ஞானசேகரன்- வெளியான முக்கிய தகவல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், கோயில் நிலத்தில் வீடு கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 23-ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பரை காவல் துறையினர் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உரிய நீதி வேண்டி மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. இதையடுத்து பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை செய்ய 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் அண்ணா பல்கலைக் கழகத்தில் பல்வேறு தரப்பில் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஞானசேகரன் வீட்டில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள ஏன் சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி ஞானசேகரன் ஏற்கனவே தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால் மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் மீண்டும் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொடூர குற்றத்தில் ஈடுபட்ட காரணத்தினால் ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை செய்தது. இ்தனையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோட்டூர் ஏரிக்கரை தெருவில் கோயில் நிலத்தில் 2 ஏக்கர் நிலத்தில் 2 மாடி வீடு கட்டியிருப்பதாக வருவாய்த்துறையினர் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஞானசேகரன் வீடு கட்டியுள்ள நிலம், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.