ஞானசேகரனின் கூட்டாளி கைது- 2 கிலோ வெள்ளி பறிமுதல்

 
ச்

சென்னை அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரனின் கூட்டாளி பொள்ளாச்சி முரளி கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் புழல் சிறையில் உள்ளார். தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் ஞானசேகரணை காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் ஏழு வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். ஞானசேகரன் கொடுத்த தகவலின் பேரில் ஆலந்தூரை சேர்ந்த நகை வியாபாரி குணால் என்பவரை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்து 120 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் ஞானசேகரனின் செல்போன் அழைப்புகள் அடிப்படையில் பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான (MBA drop) முரளி சென்னையில் பிரபல மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளார். முரளி ஒரு மோசடி வழக்கில் செம்மஞ்சேரி போலீசாரிடம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்கியுள்ளார். ஞானசேகரனும் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளிவந்த பின் நட்பு தொடர்ந்துள்ளது. மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்த போது ஒரு பெண்ணை காதலித்து முரளி திருமணம் செய்துள்ளார். மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தாலும் ஆன்லைன் டிரேடிங் கில் மோகத்தால் பணத்தை இழந்து கடனாளியாகி உள்ளார்.

அப்போது  சிறை நண்பர் ஞானசேகரனை சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் ஞானசேகரனுடன் ஒரு கடத்தல் வழக்கிலும் முரளி கைதாகி உள்ளார். பள்ளிக்கரணையில் கடந்த 2022ல் இருவரும் சேர்ந்து இரண்டு கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர். இருவரும் சேர்ந்து திருவான்மியூரில் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் நினைத்தபடி சக்சஸ் ஆகவில்லை. பிறகு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு முரளி சென்றுவிட்டார். பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் அவரது காதல் மனைவி முரளி வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்து வருகிறார். முரளி தற்போது பஸ் கிளீனராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. முரளியிடமிருந்து 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முரளி கொடுத்த தகவலின் பேரில் கிளாம்பாக்கம் பாலத்தின் அடியில் நிறுத்தி இருந்த ஞானசேகரனின் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.