அதிமுக உடனான தொகுதிப் பங்கீடு சுமூகமாக இருக்கும்- ஜி.கே.வாசன்
வரும் தேர்தலில் அதிமுக உடனான தொகுதிப் பங்கீடு சுமூகமாக இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
சேலத்தில் இன்று மாலை திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பொய் வாக்குறுதிகளால் வாக்காளர்கள் எப்படி ஏமாற்றப்பட்டனரோ, இந்த முறை வாக்காளர்களால்,திமுக ஏமாற்றமடையும். பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடிக்க முயலும் திமுகவுக்கு வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மக்களின் வரிப்பணத்தை செலவழிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாத, ஊழல் மிகுந்த அரசாக திமுக அரசு உள்ளது. வாக்கு வங்கிக்காக மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இதுபோன்ற நிலை ஏற்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள்.
தமிழகத்தில் கொலை ,கொள்ளை கலாசாரம் அதிகரித்து வருவதுடன், போதை பொருட்கள் நடமாட்டமும் தலைவிரித்தாடுகிறது. ஆட்சியாளர்களால் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டம் ஒழுங்கை பேணி காக்க திமுக அரசு திணறி வருகிறது. இனியொரு வாய்ப்பை மக்கள் திமுகவுக்கு வழங்க மாட்டார்கள். மேகதாது அணையை கட்ட நினைத்தாலே டெல்டா மண்டலம் பாலைவனமாகும். கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலை திமுக வேடிக்கை பார்க்கிறது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்னும் எந்தக் கூட்டணியிலும் சேராத கட்சிகள் உள்ளன. இன்னும் சில கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் வந்து சேரும் என நம்புகிறேன். அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூக இருக்கும். கூட்டணி கட்சிகளை அழைத்துப் பேசி தலைவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்.
வரும் சட்டமன்ற தேர்தலில் என்னுடைய கட்சியை சேர்ந்த என்னை தூக்கி சுமந்து கொண்டிருக்கும் தலைவர்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்களுக்கு அதிக அளவு சீட் பெற்று தருவது எனது கடமை. இந்த கடமையை மனதில் வைத்துக் கொண்டு தான் , நான் மேலவை உறுப்பினர் பதவிக்கு கூட எந்த அழுத்தமும் தரவில்லை. எந்த இலக்கு எப்படி கிடைத்தாலும் சமூகமான முடிவாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக இருப்பதால் தான் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வருவாய்த்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போர் நடைபெறும் நாடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தவித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. அவர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்” என்றார்.

