கூட்டணி குறித்து பேச அதிமுக, பாஜகவிடம் இருந்து அழைப்பு வரவில்லை- ஜி.கே.மணி

 
GK Mani GK Mani

கூட்டணி குறித்து பேச அதிமுக, பாஜகவிடம் இருந்து தங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

gk mani

சேலம் மரவனேரி பகுதியில் உள்ள சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் அவர்களை இன்று  சந்தித்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள், தங்களது  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் பேராயருடன்  கிறிஸ்மஸ் கேக் வெட்டி ,  தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ்,  சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாமக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடத்துவது வழக்கம்.  அந்த வகையில் இன்று சேலம் மறைமாவட்ட   பேராயர் அருள் ராயப்பன் அவர்களை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம். இந்தியாவில் கல்விச்  சேவை , மருத்துவ சேவையில் சிறந்து விளங்கி வருபவர்கள் கிறிஸ்துவ பெருமக்கள் ஆவர். அதேபோல் இவர்கள்   தமிழ் பற்றாளர்களாகவும் , இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற வகையிலும்  செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்காக மருத்துவர் ராமதாஸ் ,  அறிவுரை பேரில்  இன்று பேராயரை  சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம்.


வரும் 29ஆம் தேதி சேலத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் , பாமக செயற்குழு ,  பொதுக்குழு கூடுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ள  இந்த நேரத்தில், இந்த பொதுக்குழுவை நாங்கள் மிக முக்கியமானதாக கருதுகிறோம். கூட்டணி குறித்து ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ் தான். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேசியுள்ள நிலையில், கூட்டணி குறித்து பேச அழைப்பு வந்ததா?  என கேட்டதற்கு, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா சார்பில் எங்களுக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. யூகத்தின் அடிப்படையில் சொல்லலாம். ஆனால் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. பாமக என்றால் மருத்துவர் ராமதாஸ் தான், இப்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னையால், கடந்த ஓராண்டாக மருத்துவர் ராமதாஸ்  மிகப்பெரிய வேதனையில் உள்ளார். அதன் வெளிப்பாடாக  தான் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். பின்னர் தில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.  இதில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எங்கள் தரப்புக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. யார்? வேண்டுமானாலும் பாமக எனக் கூறி கொள்ளலாம். தமிழக மக்கள் யார் சொன்னால் வாக்களிப்பார்கள். மருத்துவர் ராமதாஸ் சொன்னால் தான் வாக்களிப்பார்கள். இதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி கூட்டணியாக இருக்கும்” என்றார்.