ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

 
GK Vasan

தமிழக அரசும், ஆளுநரும் இணைந்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

ஆன்லைன் சூத்தாட்டங்களால் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடை செய்யும் சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதில் உரிய விளக்கங்கள் இல்லை என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த நிலையில், மீண்டும் இந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்புவது என நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டது. இந்நிலை தொடரக்கூடாது. ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமாக தமிழக அரசின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு திருப்பி அனுப்பியதாக செய்தி வெளிவந்தது. நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமாக மீண்டும் மசோதா நிறைவேற்றப்படும் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. எனவே இதன் முக்கியத்துவத்தை கருதி தமிழக அரசும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் இதில் உள்ள சட்டச்சிக்கலை தீர்க்கக்கூடிய வண்ணம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.