தமிழ் மாநில காங்கிரஸ் 11 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சி - ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) 11 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) 11 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்து தொடர்ந்து இயக்க நலன், மக்கள் நலன் காக்கும் வகையில் செயல்பட்டு வளமான தமிழகத்திற்கும், வலிமையான பாரதத்திற்கும் வழி வகுக்கும் த.மா.கா(மூ) வின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரின் தொடர் உழைப்பு இயக்கத்திற்கும், இயக்கத்தினருக்கும் பலம் சேர்ப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது, நன்றிக்குரியது.தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) நவம்பர் 28, 2014 ல் துவக்கப்பட்டு 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 11 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆசியோடு இயக்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை இயக்கத்தின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தொடர்ந்து இயக்கத்திற்காக, மக்களுக்காக உழைத்து வருவது இயக்கத்திற்கு பலம் சேர்க்கிறது.
குறிப்பாக இயக்கத்தினர் இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக இயக்கப்பணிகள் மேற்கொண்டதும், இயக்கத்தினரின் குடும்ப இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் போற்றுதலுக்குரியது.பொது மக்களின் அவசர, அவசிய தேவைகளை அறிந்து அவர்களுக்கு துணை நிற்கும் வகையில் பணிகள் செய்வதும், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் பெருமைக்குரியது. மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், எஸ்.சி.எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இயக்கமாக த.மா.கா செயல்படுகிறது. அந்த வகையில் த.மா.கா(மூ) சார்பில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதம் நடைபெற்று மக்கள் நலன் காக்கப் பாடுபடுவது சிறப்புக்குரியது.த.மா.கா(மூ) வின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து தமிழக மக்கள் நலன், இயக்க நலன் காக்கப் பாடுபட்டு இப்போது 11 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு காரணம் இயக்கத்தின் ஒவ்வொருவரின் கடின உழைப்பே. இந்நிலையில் த.மா.கா(மூ) வினர் தொடர்ந்து இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக உறுப்பினர் சேர்ப்பு பணியில் மிகச்சிறப்பாக ஈடுபட்டு வருவதும் பாராட்டுக்குரியது.
தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) இயக்கப் பணிகளுக்காக, மக்கள் நலப் பணிகளுக்காக தலைவர் என்ற முறையில் என்னோடு இணைந்து 11 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தொடர்ந்து உழைக்க இருக்கும் இயக்கத்தினர் ஒவ்வொருவருக்கும் பெருந்தலைவர், மக்கள் தலைவர் ஆசியோடு எனது மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இயக்கத்திற்கும், இயக்கத்தினருக்கும் வருங்காலம் வசந்தகாலமாக அமையும் என்ற உறுதியோடு உங்களில் ஒருவராக நானும் தொடர்ந்து கடினமாக உழைத்து வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்குவோம்.தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) நேர்மை, எளிமை, தூய்மையைப் பின்பற்றி தமிழர்களின் நலன், தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக தொடர்ந்து செயல்பட்டு வெற்றி பெறும் என்பதை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.