விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பலி- ஜி.கே.வாசன் இரங்கல்
விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பது வருத்தத்துக்குரியது, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
மேலும் பல தொழிலாளர்கள் காயமடைந்திருப்பதும் வேதனைக்குரியது. தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தினால் அறைகள் தரைமட்டமாகியிருக்கிறது.
காயம்டைந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய தொடர் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பட்டாசு ஆலையில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தனியார் ஆலை நிர்வாகத்தின் பொறுப்பு. தமிழக அரசும், பட்டாசு ஆலைகள் உரிய விதிமுறைகளை கடைபிடிக்கிறதா என்பதை தொடர் கண்காணிப்பின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மேலும் காயமடைந்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆலையின் பாதுகாப்பு ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை தனியார் ஆலை நிர்வாகமும், தமிழக அரசும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.