பாஜகவினர் கைது...ஜனநாயகத்திற்கு விரோதமானது...ஜி.கே.வாசன் கண்டனம்!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தது கண்டனத்திற்கு என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்பது நியாயமில்லை.தமிழக அரசு – பாலியல் வன் கொடுமை சம்பந்தமாக நடைபெறும் போராட்டத்திற்கு அனுமதி அளித்து, பாதுகாப்பு கொடுத்து, பெண்களுக்கு துணை நிற்க வேண்டும்.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மதுரையில் பாஜக வினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டதற்கு தமிழக அரசு மறுத்தது. இந்நிலையில் மதுரையில் பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்த பாஜக வினர் தமிழக அரசிடம் அனுமதி கேட்டது முறையானது. எனவே தமிழக அரசின் இந்த கைது நடவடிக்கையை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கண்டிக்கிறேன். மேலும் தமிழக அரசு கைது செய்யப்பட்டுள்ள பாஜக வினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக எதிர்க்கட்சிகளின் நியாயமான ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கு தமிழக அரசு ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம் என்று பார்க்காமல் மக்கள் நலன் காக்கும் வகையில் முறையாக செயல்பட வேண்டும் என்று த.மா.கா(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.