மின்கட்டண உயர்வு - மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் நாளில் மனு அளிக்க முடிவு!!

 
gk

மின்கட்டண உயர்வை கைவிட கோரி மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் நாளில் தமிழ்நாடு முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மனு அளிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் , எம்.பி.யுமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் 27% வரை உயர்த்தப்பட உத்தேசித்துள்ளதாக மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் மின் மிகை மாநிலமாக இருந்ததை , தற்பொழுது பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் மாநிலமாக மின்சார வாரியம் ஏற்படுத்தியுள்ளது.

eb

திமுக தனது தேர்தல் அறிக்கையில் மின் பயன் அளவீடு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிப்பதால், நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இதை தவிற்கும் வகையில் மாதந்தோறும் மின் பயன் அளவீடு செய்யப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் முறையாக நிறைவேற்றாத திமுக அரசு, மின்சார கட்டணத்தை உயர்த்த நினைப்பது மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

govt

தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்னர் சொத்துவரியை உயர்த்தியது. தற்போது, மின் கட்டண உயர்வை அறிவித்து மக்களுக்கு மேலும் சுமையை ஏற்றுகிறது. இதனால் ஏழை, எளிய , நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே தமிழக அரசு உயர்த்திவுள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முதற்கட்டமாக , மாவட்டத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மற்றும் அனைத்து தரப்பினரும் இணைந்து, தமிழகம் முழுவதும் வருகிற ஜூலை மாதம் 25 – ஆம் தேதி குறை தீர்க்கும் நாளில், அந்தந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பார்கள்.  ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.