ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஜனவரி வரை அவகாசம் வழங்குக - விக்கிரமராஜா..

 
விக்கிரமராஜா

 ரூ. 2000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ரூபாய்  நோட்டுகளை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அவகாசம் அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளதாவது, “ 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 8 நாட்களும், அடுத்து வரும் 4 மாதங்களிலும் மட்டுமே கால அவகாசம் என்பது கண்டிப்பாக போதுமானதாக இருக்காது. பொதுமக்களிடம் இருந்து வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வந்தாலும் வணிக ரீதியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வியாபாரிகளிடம் அதிக அளவில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

2000 ரூபாய் நோட்டு

எனவே செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் வியாபாரிகள் பலருக்கு ஏற்பட்டது. இதனால் கடுமையான பாதிப்புகளையும் வியாபாரிகள் சந்திக்க நேரிட்டது. இதன்காரணமாகவே பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.