‘சமக்ரா சிக்‌ஷா திட்ட நிதியை உடனே கொடுங்க’ உங்க அக்கறையை இதில் காட்டியிருக்கலாம் - தமிழக அரசை சாடிய ஓபிஎஸ்..

 
ops

தமிழகத்துக்கு உரிய சமக்ரா சிக்‌ஷா திட்ட நிதியை அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ள  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , தமிழக அரசு விழாக்கள் நடத்துவதற்கு செலுத்திய அக்கறையை நிதி பெறுவதில் செலுத்தியிருக்கலாம் என்றும் சாடியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும், சமமான மற்றும் தரமான கல்வியை அளிப்பதையும், வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்படுகின்ற திட்டமாக சமக்ரா சிக்‌ஷா திட்டம் விளங்குகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ், 3,586 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 60 விழுக்காடு பங்கான 2,152 கோடி ரூபாயினை மத்திய அரசு அளிக்க வேண்டுமென்றும், இதற்கான கருத்துரு ஏப்ரல் 2024 ஆம் ஆண்டிலேயே மத்திய அரசுக்கு அனுப்பியும், முதல் தவணையான 573 கோடி ரூபாய் இன்னும் மத்திய அரசால் விடுவிக்கப்படவில்லை என்றும், இது தவிர முந்தைய ஆண்டில் விடுவிக்கப்பட வேண்டிய 249 கோடி ரூபாயும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

stalin


இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததற்கு காரணம், தேசியக் கல்விக் கொள்கையின்கீழ் வரும் பி.எம். ஸ்ரீ பள்ளிகளை திறக்காதது என்று கூறப்படுகிறது. அதாவது, நடைமுறையில் உள்ள சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் நிதியைப் பெற வேண்டுமானால் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை தற்போது மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டத்திற்கு புதிய நிபந்தனையை விதிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இது குறித்து, முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தாலும், இது ஒரு காலந்தாழ்ந்த நடவடிக்கைதான். 

mk stalin write a letter to modi

மக்களவைத் தேர்தல் முடிந்த உடனேயே மத்திய கல்வித் துறை அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்து இதில் உள்ள நிலையை விளக்கியும், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மூலம் இது குறித்த உண்மை நிலையை மத்திய அரசு உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தும், இந்தத் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், இதனைச் செய்ய திமுக அரசு தவறிவிட்டது. பல்வேறு அரசு விழாக்களை நடத்துவதில் செலுத்திய அக்கறையை, சமக்ரா சிக்‌ஷா திட்ட நிதியை பெறுவதிலும் முதலமைச்சர் செலுத்தியிருந்தால், இந்நேரத்தில் அதற்கான நிதியை பெற்றிருக்கலாம்.

தமிழக மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை உடனடியாக அளிக்க மத்திய அரசு முன் வரவேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.