மகளிருக்கு பெப்பர் ஸ்ப்ரே கொடுங்கள்: தவெக அரசைச் சாடிய கனிமொழி..!
தவெக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இதுவரை 700 கொலைகளும், பெண்களுக்கு எதிரான 400 பாலியல் வழக்குகளும் பதிவாகியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். பெண்களைக் காப்பாற்ற இந்த அரசால் முடியாது என்பதால், ரேஷன் கார்டு மூலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் பெப்பர் ஸ்ப்ரே வழங்க வேண்டும் என ஆவேசமாகத் தெரிவித்த அவர், இதுதான் முதலமைச்சர் விஜய் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் லட்சணமா என்றும் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சேப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி MP கலந்துகொண்டு த.வெ.க. அரசையும், முதலமைச்சர் விஜயையும் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
அதில் பேசிய அவர் "த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாடு என்பது போதைப் பொருட்கள் தாராளமாகக் கடத்தப்படும் மாநிலமாக மாறிவிட்டது. பணத்தாசை பிடித்து அலையும் முதலமைச்சர் விஜயும், அவருடன் இருக்கும் 40 அலிபாபா திருடர்களும் விரைவில் மக்களின் கண்முன்னே அம்பலப்படுவார்கள். தான் எதற்காக முதலமைச்சர் ஆனேன் என்றுகூடத் தெரியாத குழப்பமான நிலையில்தான் விஜய் உள்ளார்" என்று கனிமொழி கடுமையாகச் சாடினார்.
"ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 'இது நாடா, காடா?' என்று அன்பான தம்பி, 'ஸ்வீட் ப்ரோ' விஜய் சவால் விட்டாரே... இப்போது என்ன ஆனது? அண்ணன் ஸ்டாலின் ஆட்சி சரியில்லை என்றுதானே மக்கள் இவரை நம்பி ஓட்டுப் போட்டார்கள்? ஆனால், இப்போது கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். மாற்றம் வரும் என்று நம்பி த.வெ.க.வுக்கு வாக்களித்த பெண்களெல்லாம் இப்போது தாங்கள் செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறார்கள்; பெண்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டார்கள்" என்று அவர் விமர்சித்தார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், "எங்கள் குழந்தைகளுக்கு நீங்களும் மோதிரமெல்லாம் போட வேண்டாம்; எங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருந்தாலே போதும். நீங்கள் எங்களுக்கு எந்தச் சீரும் செய்ய வேண்டாம்; அதற்குப் பதிலாகப் பெண்களின் பாதுகாப்பிற்காகப் 'பெப்பர் ஸ்பிரே' (Pepper Spray) கொடுங்கள். இந்தத் துப்பில்லாத ஆட்சியில் அதுவாவது பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும்" என்று ஆவேசமாகக் கூறினார்.
த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், "இந்த ஆட்சியில் இதுவரை 700 கொலைகளும், பெண்களுக்கு எதிரான 400 வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. இதுதான் சட்டம்-ஒழுலைப் பாதுகாக்கும் லட்சணமா?" என்று கேள்வி எழுப்பினார்.

